Archives: பிப்ரவரி 2025

கிறிஸ்துவின் சமாதானம்

வாக்குவாதத்தால் வெல்வார்களா? ஒருபோதுமில்லை. ஒரு சிறு நகரத் தலைவர் அடிரோண்டாக் பூங்காவில் வசிப்பவர்களை எச்சரித்தார், அங்கு சுற்றுச்சூழலாளர்கள் மற்றும் சிறு தொழில் உரிமையாளர்களுக்கு இடையேயான சண்டை, "அடிரோண்டாக் போர்களை" தூண்டியது. அப்ஸ்டேட் நியூயார்க்கில் உள்ள பழமையான வனப்பகுதியைக் காப்பாற்றுவதா அல்லது அதை மேம்படுத்துவதா என்ற அவர்களின் போராட்டத்தை, பெயரே விவரித்தது.

"நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே திரும்புங்கள்!" ஒரு உள்ளூர் தலைவர், சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் கத்தினார். ஆனால் விரைவில் ஒரு புதிய செய்தி வெளியானது. “ஒருவருக்கொருவர் சத்தம் போடாதீர்கள். ஒருவருக்கொருவர் பேச முயலுங்கள்". சண்டையிடும் பிரிவுகளுக்கு இடையே பாலம் அமைக்க, சார்பற்ற ஒரு பொதுவான கூட்டணி உருவாக்கப்பட்டது. பொதுஜனங்களின் உரையாடல் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது; இருபது ஆண்டுகளிலிருந்ததை விட அடிரோண்டாக் நகரங்கள் மிகவும் செழிப்பாக வளர்ந்தபோதும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஏக்கர் காட்டு நிலம் பாதுகாக்கப்பட்டது.

சமாதானமான சகவாழ்வு ஒரு ஆரம்பமே, ஆனால் பவுல் மேலான ஒன்றைக் கற்பித்தார். கொலோசேயில் இருந்த புதிய விசுவாசிகளிடம், “கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்" (கொலோசெயர் 3:8) என்றார். கிறிஸ்துவிலான புதிய சுபாவத்திற்கு தங்கள் பழைய வழிகளை மாற்றிக்கொள்ளுமாறு பவுல் அவர்களை வலியுறுத்தினார்: "உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு" (வ.12) என்று அவர் எழுதினார்.

கிறிஸ்துவிலான புதிய வாழ்க்கைக்கு நமது பழைய கேவலமான வாழ்க்கையைச் சரணடையச் செய்வதற்கான இந்த அழைப்பு அனைத்து விசுவாசிகளுக்கும் இன்று  விடுக்கப்படுகிறது. "தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்" (வ.15). அப்போது, ​​நம் சமாதானத்தில், உலகம் இயேசுவைக் காணும்.

முன்னோக்கிய பாதை

'நாம் என்ன செய்வது?' வேதாகமத்திற்கு மாறான வாழ்க்கை முறைகளைத் தெரிந்துகொண்ட நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்று மஞ்சுவும், தயாளும் வேதனைப்பட்டனர். அவர்கள் வேதவாக்கியங்களைப் படித்து ஜெபித்தபோது, ​​முன்னோக்கிச் செல்ல ஒரு வழியும் உண்டானது: முதலில், அவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் அன்பானவர்களிடம் தங்கள் அன்பை வலுப்படுத்தினர்; இரண்டாவதாக, தேவனின் நல்ல திட்டத்தின் அடிப்படையில் அவர்கள் உண்மையையும் நல்லதையும் வெளிப்படுத்தினர்; மூன்றாவதாக, வேதாகம ஞானத்தின் அடிப்படையில் அவர்களுடன் எப்படி அன்புடன் பழகுவார்கள் என்பதை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். காலப்போக்கில், மஞ்சுவும் தயாளும் கிறிஸ்து போன்ற அன்பை வெளிக்காட்டியதால்,  உறவுகளில் அதிக நம்பிக்கை ஏற்பட்டது.

தேவனையும் தன்னையும் மதிக்காத வாழ்க்கை முறையைத் தெரிந்துகொண்ட ஒரு பெண்ணை எப்படி தன் மனைவியாக்கிக் கொள்வது என்று ஓசியா யோசித்திருக்கலாம். தேவனோ, “தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை சேர்த்துக்கொள்" (ஓசியா 3:1) என்று தீர்க்கதரிசியை வழிநடத்தினார். தீர்க்கதரிசி அவள் மீதான தனது அன்பை வெளிப்படையாக வலுப்படுத்தினார்; அதே சமயம் அவர்களுக்கும், தேவனுக்கு முன்பாக அவர்களின் உறவுக்கும் எது தகுதியானது மற்றும் உண்மையானது என்பதை வெளிப்படுத்தினார் (வ.3). அவளுடனான அவரது உறவு, கலகவீட்டாரான பூர்வ இஸ்ரவேலுடனான தேவனின் சொந்த சவாலான உறவையே அடையாளப்படுத்தியது. அவர்கள் ஒரு தவறான போக்கைத் தேர்ந்தெடுத்தாலும், அவர் முன்னோக்கிச் செல்வதற்கான பாதையை வழங்கினார், அவர் "அவர்களை மனப்பூர்வமாய்"  (14:4) சிநேகிப்பார். ஆனால் அவர்கள் அவருடைய வழிகளைத் தெரிந்துகொள்ளும்படி கூறினார், ஏனெனில் அவைகளே "செம்மையானவைகள்" (வ.9).

தேவன் ஞானத்தையும் பகுத்தறிவையும் அருள்வதால், வேதாகமத்திற்கு மாறான வாழ்க்கை முறையைத் தெரிந்துகொண்டவர்களுக்கும் அவருடைய அன்பையும் சத்தியத்தையும் தொடர்ந்து வழங்குவோம். முன்னோக்கிச் செல்லும் பாதையை நமக்கு அவரது உதாரணமே வழங்குகிறது.

கொடுப்பதில் உள்ள சந்தோஷம்

ஐந்து மணி நேர விமான பயணத்தில், ஒரு பெண் தீவிரமாக கம்பளி சட்டையைப் பின்னிக்கொண்டிருந்தாள். அவள் தனது ஊசியை உள்ளேயும் வெளியேயும் நகர்த்தும்போது, ​​அவள் அசைவுகளில் சொக்கிப்போன ஐந்து மாதக் குழந்தையைக் கவனித்தாள். அப்போது அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது: அவள் பின்னிக்கொண்டிருந்த கம்பளி சட்டையை முடிப்பதற்குப் பதிலாக; அவள் தனது சிறிய ரசிகனுக்காக ஒரு தொப்பியை பிண்ண எண்ணினாள். விமானம் தரையிறங்கும் நேரத்தில் அவள் தொப்பியை முடிக்க வேண்டும், அதற்கு ஒரு மணிநேரமே இருந்தது ! அந்த பெண், குழந்தையின் தாயாருக்குச் சிறிய தொப்பியைப் பரிசாக அளித்த போது, ​​மற்ற பயணிகள் புன்னகையுடன் கைதட்டி மகிழ்ந்தனர், அதை முழு குடும்பமும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டனர்.

ஆச்சரியமான பரிசுகள் பெரும்பாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவை நமக்குத் தேவையான அல்லது வெறுமனே விரும்பும் பரிசுகளாக இருந்தாலும், அவற்றின் மூலம் கொடுப்பவர் கிறிஸ்துவின் இரக்கத்தையும் நமக்குக் காட்டலாம். ஆதி சபையில், தபீத்தாள் ஆடைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், "நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்" செய்வதற்கும் பேர்போனவள் (அப்போஸ்தலர் 9:36). அவள் இறந்தபோது, ​​அவளால் பயனடைந்தவர்கள் “[அவள்] செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும்" (வ.39) காண்பித்தனர். அவளுடைய கருணையையும் மற்றும் அவள் தங்கள் வாழ்க்கையைத் தொட்ட விதத்தையும் அவர்கள் சாட்சியமளித்தனர்.

நிகழ்வுகளின் வியத்தகு திருப்பத்தில், பேதுரு, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையின் மூலம், தபீத்தாளை மீண்டும் உயிர்ப்பித்தார் (வ.40). அவருடைய செயல்கள் அவளை நேசித்தவர்களை மகிழ்ச்சியில் நிரப்பியது; மேலும் பலர் கிறிஸ்துவில் விசுவாசிக்க வழிவகுத்தது (வ.42).

நம்முடைய தயவான செயல்களே நாம் செய்யும் மிகவும் மறக்கமுடியாத சில சாட்சியங்களாக இருக்கலாம். தேவன் வழங்குவதற்கேற்ப, இன்று சில ஆச்சரியமான பரிசுகளைப் பிறருடன் பகிர்ந்து கொள்வோம்.

உதாரத்துவத்திற்குப் பதில் செய்தல்

லிடியாவுக்கு அறிமுகமில்லாத நன்கொடையாளர்கள் கிட்டதட்ட 8.5 லட்சங்களைப் பரிசாக வழங்கியபோது, ​​அதில் கொஞ்சமே தனக்காகச் செலவு செய்தார். மாறாக, சக பணியாளர்கள், குடும்பத்தினர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்குத் தாராளமாகப் பரிசுகளை வழங்கினார். தடயமற்ற வங்கிப் பரிமாற்றத்தின் மூலம் 8.5 லட்சம் பரிசுக்கு இருநூறு பேர் தெரிந்தெடுக்கப்பட்டு,  எவ்வாறு செலவழித்தனர் என்பதைத் தொடர்ந்த ஒரு ஆய்வின் ஒரு பகுதியாக லிடியா இருந்தார் என்பது அவருக்கே தெரியாது. அந்த அன்பளிப்புப் பணத்தில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் கொடையாகக் கொடுக்கப்பட்டதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கதையைப் பகிர்ந்துகொண்டு, டெட் எனும் இலாப நோக்கற்ற ஊடக அமைப்பின் தலைவரான கிறிஸ் ஆண்டர்சன், “மனிதர்களாகிய நாம் உதாரத்துவத்திற்குத் தாராள மனப்பான்மையுடன் பதில் செய்வது நமக்குள் இயற்கையாக இருக்குமொன்று போல" என்றார்.

வேதாகமத்தில், ஜனங்கள் தாராளமாகக் கொடுத்து வாழும்போது, ​​​​அவர்கள் தங்களைப் படைத்த தேவனின் இதயத்தைப் பிரதிபலிக்கிறார்கள் என்பதை நாம் காண்கிறோம். தேவன் தாராளமாகவும், இரக்கமுள்ளவராகவும், கருணையுள்ளவராகவும் இருக்கிறார், சிலருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும்; "நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும்" கூட (லூக்கா 6:35). ஆகவே, தேவனின் சுபாவத்தைப் பிரதிபலிக்க விரும்புவோருக்கு, "கைம்மாறுகருதாமல்" (வ.32-35) "அன்பு" செய்ய, "நன்மை செய்ய" மற்றும் எதிரிகளுக்கு "கடன் கொடுக்க" இயேசு அறிவுறுத்தினார்.

நாம் எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கும்போது, ​​அது ஒருபோதும் நமக்கு தீங்குண்டாக்கும் வாழ்க்கை முறை அல்ல என்பதை அறிந்துகொள்வோம். இதையும் இயேசு சுட்டிக்காட்டி, “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்... நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்” (வ.38). தேவனின் தாராள மனப்பான்மைக்கு நாம் பதிலளிக்கும் விதமாக உதாரத்துவமாய் வாழ்வதன் மூலம், ​​எண்ணற்ற வழிகளில் நாம் செழிப்புடன் இருப்பதைக் காணலாம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தகுதி உரிமையல்ல

ஞாயிறு பள்ளிக்குப் பிறகு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய கல்லூரியின் புதிய இயக்குநராக நான் அறிந்திருந்த ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் பொதுப் பேருந்தில் அவரைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதவியில் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கென நியமிக்கப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுநரைக் கொண்டிருப்பார்கள். எனவே, நான் அவரிடம், "நீங்கள் எப்படி காரில்லாமல் பேருந்தில் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர், "நான் எப்போதும் பேருந்தில் செல்வதால்தான்" என்று பதிலளித்தார், அவரது புதிய பதவி அவரது வழக்கமான நடைமுறையை மாற்றவில்லை. அவர் தனது பட்டத்துக்குரிய உரிமையை அனுபவிக்க உடன்படவில்லை.

பிலிப்பியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசிகள் தாழ்மையுடன் இருக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார் (வ.3). அவர்கள் "வாதினாலாவது" அல்லது "வீண்பெருமையினாலாவது" (வ.3) எதையும் செய்யக்கூடாது என்று அவர் கூறுகிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடுவதில், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே" (வ.5) கொண்டிருக்க வேண்டும். உன்னதமான அந்தஸ்தை இயேசு பெற்றிருக்கிறார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்" (வ.6) இருந்தார். அவர் தனக்குரியதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய நலன்களில் அக்கறை கொண்டார். அவர் "அடிமையின் ரூபமெடுத்து" , மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (வ.7-8).

நமது வேலை, கல்வி, வயது அல்லது சமூக அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நாம் விசேஷமான முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாம் உணரும்போது, நமது தகுதிகளையும் நமது உரிமை உணர்வையும் எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதை இயேசு நமக்குக் காட்டினார் என்பதனை நினைவில் கொள்வோம். கடினமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சக மனிதர்களிடம் பணிவாக இருக்கும் மனநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவனின் திறந்த வாசல்கள்

ஒரு பெருநகர் அருகிலுள்ள எனது புதிய பள்ளியில், வழிகாட்டி ஆலோசகர் என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தபின், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் உள்ள ஆங்கில வகுப்பை எனக்கு கொடுத்தார். நான் எனது முந்தைய பள்ளியிலிருந்து சிறந்த தேர்ச்சி, சிறந்த மதிப்பெண்கள் மற்றும் எனது எழுத்துக்கான முதல்வரின் விருதுடன் வந்திருந்தேன். ஆனால் இந்தப் புதிய பள்ளியில் “சிறந்த” வகுப்பிற்கான கதவு எனக்குத் திறக்கப்படவில்லை. வழிகாட்டி ஆலோசகர் நான் பொருத்தமற்றவனோ அல்லது தயாராகவோ இல்லை என்று முடிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட சகஜமான பின்னடைவுகளை ஆதிதிருச்சபையான பிலதெல்பியா தன் அனுபவத்தில் பெற்றிருந்தது. சிறிய மற்றும் எளிமையான அந்த திருச்சபை இருந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. மேலும் சாத்தானின் எதிர்ப்பை சந்தித்தனர் (வெளிப்படுத்துதல் 3:9). புறக்கணிக்கப்பட்ட இந்த திருச்சபைக்கு உயிர்த்தெழுந்த இயேசு, “உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே” (வ.8) எனக் குறிப்பிட்டார். ஆகையால், “ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்” (வ.7) அவர்களுக்கு “எவராலும் மூட முடியாத இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் “(வ.8) என்றார்.

நமது ஊழியத்திற்கும் இது பொருந்தும். சில கதவுகள் திறக்கப்படுவதே இல்லை. இருப்பினும், ஒரு வழிகாட்டி ஆலோசகர் கதவை அடைத்தாலும், தேவன் எனக்கு நிச்சயமாகவே கதவுகளைத் திறந்துள்ளார், அவருக்காக நான் எழுதுவதன் மூலம், உலகளாவிய உள்ளங்களைத் தொடும் வாய்ப்பை தந்தார். உங்களையும் மூடிய கதவுகள் தடுக்காது. இயேசு “நானே வாசல்” என்றார் (யோவான் 10:9). அவர் திறக்கும் கதவுகளுக்குள் நுழைந்து அவரைப் பின்பற்றுவோம். 

தேவனின் ஞானமான நோக்கங்கள்

இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், “இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?” (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக “ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?” எனலாம்.

எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்”(வ. 5). பிரசங்கி 3:11, “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” என்று நமக்கு நினைவூட்டுகிறது. ‘நேர்த்தியாக” என்ற சொல்லுக்கு “பொருத்தமானது” அல்லது “மகிழ்ச்சியின் காரணம்” என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.